சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற ஈரோடு சிறுமி

சாதனை புத்தகத்தில் ஈரோடு சிறுமி இடம் பெற்றாா்.

Update: 2022-03-31 21:40 GMT
ஈரோடு
ஈரோட்டில் பிறந்து சார்ஜா அமீரகத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து வருபவர் டி.எஸ்.ஆர்.ரிதனி காதம்பரி. இவருடைய திறனை பார்த்து வியந்த பள்ளிக்கூட ஆசிரியர்கள் ரிதனி காதம்பரிக்கு தூண்டுகோலாக இருந்தனர். பெற்றோர்களும், ஆசிரியர்களும் இவருக்கு நிறைய கற்றுக் கொடுத்தனர். 2 வயதில் தொடங்கிய இவரது நினைவாற்றல் 4 வயதில் தனியாக ஒரு பாடல் எழுதி, அதற்கு இசை அமைத்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெறும் அளவுக்கு உயர்ந்தார். இந்த நிலையில் 193 நாடுகளின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக அரசு சார்பில் தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமீரகத்தில் நடைபெற்ற துபாய் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இதைதொடர்ந்து 5 வயது சிறுமி ரிதனி காதம்பரி தனது மழலை மொழியில் அசத்தி அனைவரின் பாராட்டை பெற்று லிட்டில் எக்ஸ்போ அம்பாசிடர் என்ற பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் மாசுபாடு ஏற்படாத வகையில் பிளாஸ்டிக், உலோகங்கள் மின் கழிவு மறுசுழற்சி முறையை பழக்கப்படுத்தியும், உலகநாடுகளில் அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் நிலைத்தன்மை தலைவர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். 
சாதனை படைத்த மாணவியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இவருடைய தாய் பிரபல ஆராய்ச்சியாளரும், எழுத்தாளருமான ஸ்ரீ ரோகிணியும் 5 வயதில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்