ஈரோடு மாநகராட்சியில் நிலைக்குழு தலைவர்கள் -நியமனக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு; 7 பதவிகளுக்கும் பெண்கள் வெற்றி பெற்று சாதனை

ஈரோடு மாநகராட்சியில் நிலைக்குழு தலைவர்கள் மற்றும் நியமனக்குழு உறுப்பினர் என 7 பதவிகளுக்கான தேர்தலில் பெண்களே வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

Update: 2022-03-31 21:25 GMT
ஈரோடு
ஈரோடு மாநகராட்சியில் நிலைக்குழு தலைவர்கள் மற்றும் நியமனக்குழு உறுப்பினர் என 7 பதவிகளுக்கான தேர்தலில் பெண்களே வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
தலைவர்கள்
ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர் தேர்தல் நடந்து முடிந்தது. மாநகராட்சியில் உள்ள 60 கவுன்சிலர்களும் பதவி ஏற்றனர். அவர்களில் ஒருவர் மேயராகவும், ஒருவர் துணை மேயராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 4 மண்டலங்களுக்கான தலைவர் தேர்தல் நடந்தது. 
இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சியின் நிலைக்குழு தலைவர்கள் மற்றும் நியமனக்குழு உறுப்பினர் தேர்தல் நேற்று நடத்தப்பட்டது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் தேர்தலை நடத்தினார்கள்.
7 பதவிகள்
தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் கவுன்சிலர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய ஆணையாளர் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து 7 பதவிகளுக்கும் 7 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனர். எனவே 7 பேரும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக ஆணையாளர் சிவக்குமார் அறிவித்தார்.
ஈரோடு மாநகராட்சியின் குழுக்களுக்கு புதிதாக வெற்றி பெற்று நியமனம் செய்யப்பட்டு உள்ள கவுன்சிலர்கள் விவரம் வருமாறு:-
கணக்கு குழு தலைவர்-புவனேஸ்வரி, பொது சுகாதாரக்குழு தலைவர் -மங்கையர்க்கரசி பிரகாஷ், கல்விக்குழு தலைவர் பி.கீர்த்தனா, வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் என்.மல்லிகா, நகரமைப்புக்குழு தலைவர்- ஜெயந்தி, பணிகள் குழு தலைவர் -சபுராமா மின்ஹாக், நியமனக்குழு உறுப்பினர்- விஜயலட்சுமி.
மேற்கண்ட 7 பேரும் போட்டியின்றி வெற்றி பெற்றனர். 
ஈரோடு மாநகராட்சியின் மேயராக பெண் கவுன்சிலரான நாகரத்தினம் வெற்றி பெற்றார். அவரை தொடர்ந்து மண்டல தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. 4 பதவிகளில் ஒரே ஒரு பதவியை தி.மு.க. கட்சி தலைமை பெண் கவுன்சிலரான அ.செல்லப்பொன்னி-க்கு ஒதுக்கியது. ஆனால், உள்கட்சி பிரச்சினை காரணமாக அவரை எதிர்த்து தி.மு.க. கவுன்சிலர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் மண்டல தலைவர் பதவி என்பது ஈரோடு மாநகராட்சியில் பெண்களுக்கு இல்லை என்ற நிலை ஏற்பட்டது.
பெண்கள் வெற்றி
இந்தநிலையில் நேற்று நடந்த 7 பதவிகளுக்கான போட்டியிலும் பெண்களே போட்டியின்றி வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளனர். தி.மு.க. தலைமை சார்பில் அறிவிக்கப்பட்ட பட்டியலில் பணிகள் குழு தலைவர் மற்றும் நியமனக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகள் நந்தகோபு, மணிகண்டராஜா ஆகிய 2 ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், நேற்று நடந்த தேர்தலின் போது அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கட்சி மேலிடம் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அவர்களுக்கு பதிலாக பணிகள் குழு தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கபுராமா மின்ஹாக் போட்டியின்றி வெற்றி பெற்றார். இதுபோல் நியமனக்குழு உறுப்பினராக விஜயலட்சுமி வெற்றி பெற்றார். இவர் உள்ளாட்சி தேர்தலிலேயே போட்டியின்றி தி.மு.க. சார்பில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமான 7 பதவிகளை பெண்கள் கைப்பற்றி இருப்பதன் மூலம் பெரியார் மண்ணில் பெண்களின் ஆட்சி உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்