சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2022-03-31 20:51 GMT
சேலம்,
தொழிலாளி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொட்டியனூர், மூக்கங்காடு பகுதியை சேர்ந்தவர் அய்யம்பெருமாள். இவரது மகன் தர்மன் (வயது 28). தொழிலாளி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த நிலையில் மகளை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியை தர்மன் கடத்தி சென்றது தெரியவந்தது.
சிறை தண்டனை
இதையடுத்து அந்த பகுதியில் ஒரு காட்டுக்கொட்டகையில் சிறுமி இருப்பது தெரிந்தது. போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் தர்மனை போக்சோ வழக்கில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தர்மனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு அளித்தார்.

மேலும் செய்திகள்