சேலம் அரசு கலைக்கல்லூரியில் 643 மாணவர்களுக்கு பட்டம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் வழங்கினார்

சேலம் அரசு கலைக்கல்லூரியில் படித்த 643 மாணவ, மாணவிகளுக்கு பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் பட்டங்களை வழங்கினார்.

Update: 2022-03-31 20:51 GMT
சேலம், 
பட்டமளிப்பு விழா
சேலம் அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா மாநகராட்சி தொங்கும் பூங்காவில் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ராஜா முன்னிலை வகித்தார். விழாவில், பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு துறைகள் வாரியாக 643 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சுமார் 165 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க கல்லூரியாக சேலம் அரசு கலைக்கல்லூரி விளங்கி வருகிறது. 1879-ம் ஆண்டு கால கட்டத்திலேயே இந்தியாவில் சிறந்த நிர்வாகத்தோடு செயல்பட்ட கல்லூரியாக இருந்திருக்கிறது. இக்கல்லூரியில் பயின்று தற்போது பட்டம் பெறும் மாணவ, மாணவிகள், சமூகத்திற்கு சிறந்த சேவையாற்ற வேண்டும். குறிப்பாக நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
பண்முக திறமைகள்
வாழ்வில் மறக்க முடியாத நாளாக பட்டம் பெறும் நாள் ஒவ்வொரு நபருக்கும் அமையும். இந்த பட்டமானது உங்களுக்கு பொறுப்புணர்வை கொடுக்கிறது. வருங்கால இந்தியாவே மாணவ சமுதாயம் தான். வேலைவாய்ப்புகள் இருந்தாலும் போட்டியும் அதிகமாக இருக்குகிறது. உங்களது பண்முக திறமைகளை பயன்படுத்தி வேலைவாயப்புகளை பெற்று நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.
இவ்வாறு துணை வேந்தர் ஜெகநாதன் கூறினார்.
643 மாணவர்களுக்கு பட்டம்
விழாவில் 41 ஆய்வியல் நிறைஞர்கள், 201 முதுநிலை மாணவர்கள், 401 இளநிலை மாணவர்கள் என மொத்தம் 643 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி துணை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் திருக்குமரன், அகிலாண்டீஸ்வரி மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்