சூளகிரியில் இருந்து சேலம் அழைத்து வந்து கல்லூரி மாணவியை மயக்கி நகை பறித்த மர்ம நபர்
சூளகிரியில் இருந்து சேலம் அழைத்து வந்து கல்லூரி மாணவியை மயக்கி நகை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சேலம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய மாணவி ஒருவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த மாணவி கல்லூரிக்கு பஸ்சில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த மாணவி அருகே 50 வயதுடைய ஒருவர் அமர்ந்துள்ளார். பின்னர் அவர் மாணவியிடம் உனது தந்தை எனக்கு நன்றாக தெரியும் என்று கூறி நைசாக பேச ஆரம்பித்தார். அதன்பிறகு அந்த மாணவிக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
இதையடுத்து அவர்கள் இருவரும் சேலத்துக்கு வந்து இறங்கினர். பின்னர் அவர் மாணவியை ஓட்டலுக்கு அழைத்து சென்று சாப்பாடு வாங்கி கொடுத்தார். மேலும் அவர் அந்த மாணவியிடம் அணிந்திருந்த நகையை கழற்றி தருமாறும், அதில் லட்சுமி படம் பதித்தால் உங்கள் குடும்பத்தில் உள்ள தோஷம் அனைத்தும் நீங்கும் என்றார். இதை நம்பிய அந்த மாணவி தான் அணிந்திருந்த நகைகளை அவரிடம் கழற்றி கொடுத்தார்.
இதையடுத்து கழிவறைக்கு சென்று வருவதாக அந்த மாணவியிடம் அவர் கூறிவிட்டு அங்கிந்து தப்பி சென்று விட்டார். பின்னர் இதுகுறித்து அந்த மாணவி பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மாணவியை மயக்கி நகை பறித்த சென்ற மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் புதிய பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதனிடையே மாணவியை அவருடைய பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.