பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் பன்னஞ்ச ராஜா உள்பட 9 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு

பா.ஜனதா பிரமுகர் வழக்கில் பிரபல நிழல் உலக தாதா பன்னஞ்சே ராஜா உள்பட 9 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

Update: 2022-03-31 20:30 GMT
பெங்களூரு: உத்தரகன்னடா மாவட்டம் அங்கோலாவை சேர்ந்தவர் ஆர்.எஸ்.நாயக். தொழில்அதிபரான இவர், பா.ஜனதா பிரமுகராகவும் இருந்து வந்தார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அங்கோலா போலீசார் வழக்குப்பதிவு செய்து நிழல் உலக தாதா பன்னஞ்ச ராஜா, அவரது கூட்டாளிகள் உள்பட 15 பேர் மீது கோகா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்த பன்னஞ்ச ராஜா கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். 

2015-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி கர்நாடக போலீசாரிடம் பன்னஞ்ச ராஜா ஒப்படைக்கப்பட்டார். இக்கொலை வழக்கு தொடர்பான விசாரணை பெலகாவியில் உள்ள கோகா சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கில் பன்னஞ்ச ராஜா, ஜெகதீஷ் பட்டீல், அம்பாஜி, மஞ்சுநாத் பட், கேரளாவை சேர்ந்த இஸ்மாயில், ஹாசனை சேர்ந்த மகேஷ், சந்தோஷ், பெங்களூரு ஆர்.டி.நகரை சேர்ந்த ஜெகதீஷ், அங்கீதகுமார் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை விவரங்கள் வருகிற 4-ந் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார். 

இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கேரளாவை சேர்ந்த ரப்பீன் சலீம், பெங்களூருவை சேர்ந்த முகமது ரசீத், உத்தரகன்னடாவை சேர்ந்த ஆனந்த் ஆகிய 3 பேர் மீதும் குற்றச்சாட்டு நிரூபணமாகாததால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆர்.என்.நாயக் கொலை வழக்குதான் கர்நாடகத்தில் முதல் முறையாக கோகா சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கோகா சிறப்பு கோர்ட்டில் நடந்த வழக்காகும்.

மேலும் செய்திகள்