திருநங்கையர்கள் தினவிழா
திருநங்கையர்கள் தினவிழா மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் திருநங்கைகள் தின விழா மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:- அரசுத் துறையில் உள்ள சமூக நலத்திட்டங்களை ஒருங்கிணைக்கும் விதமாக ஓட்டுநர் உரிமம், வீட்டுமனைப்பட்டா, பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா வீடு, நலவாரிய அட்டை, ஓய்வூதியம் மற்றும் கடன் வசதிகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை தொடர்புடைய திருநங்கைகளுக்கு மகளிர்திட்டம் மற்றும் மாவட்ட சமூக நல துறையின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் முத்துலட்சுமி ரெட்டி திருநங்கைகள் சுய உதவிக்குழு ஆரம்பிக்கப்பட்டு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இத்திட்டம் மூலம் சுழல்நிதியாக ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திருநங்கைகள் குழுவிற்கு கடந்த கொரோனா காலங்களில் கொரோனா சிறப்பு கடனாக ரூ.40 ஆயிரம் மற்றும் ரூ.60 ஆயிரம் ஆகிய இரண்டு கட்டங்களாக வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, பால் வியாபாரம், சேலை மற்றும் நைட்டி வியாபாரம் உள்ளிட்டவைகள் செய்து வருகிறார்கள். மேலும் இதுவரை குழுவில் இல்லாதவர்களை கண்டறிந்து திருநங்கைகள் சுய உதவிகுழுவில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய தினம் திருநங்கைகளுக்கான திறமைகளை வெளிப்படுத்தும் பொருட்டு ஆடை அலங்காரப் போட்டி, நடனப் போட்டி, சமையல் போட்டி, பாட்டு போட்டி மற்றும் இதர திறன்களை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.