செல்போன் திருடர்கள் 13 பேர் கைது

திருச்சி மாநகரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் செல்போன் திருடர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-31 19:13 GMT
திருச்சி, ஏப்.1-
திருச்சி மாநகரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் செல்போன் திருடர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
புலன் விசாரணை
திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சமீப காலங்களில் பொதுமக்களை அச்சுறுத்தி சங்கிலி பறிப்பு மற்றும் செல்போன்களை பிக்பாக்கெட் அடிப்பது போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெற்றது. இந்த  குற்றவாளிகளை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் புலன்விசாரணை செய்து வந்தனர்.இந்நிலையில் திருச்சி மாநகரத்தில் செல்போன்களை பிக்பாக்கெட் அடித்துசென்ற சஞ்சீவி, அபுதாகீர், அஜ்மத்அலி ஆகிய 3 பேர் காந்திமார்க்கெட் பகுதியிலும், கார்த்தி என்ற பல்லு கார்த்தி, ஜாக்கி என்ற பிரசாந்த், ஜெயசீலன் ஆகிய 3 பேரும், பாலக்கரை - குட்ஷெட் ரெயில்வே மேம்பாலம் மற்றும் கே.கே.நகர் பகுதியிலும், இப்ராஹிம் என்ற இட்லி, சபீர், ஜாபர்சாதிக், காதர் ஆகிய 4 பேர் கோட்டை பகுதியிலும், லதா, ராமு என்ற ராஜி ஆகிய 2 பேர் எடமலைப்பட்டிப்புதூர் பகுதியிலும், குணசேகரன் என்பவர் கண்டோன்மெண்ட் பகுதியிலும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடமிருந்து செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டன.
பாராட்டு
பொதுமக்களிடம் லிப்ட் கேட்பது போன்று அவர்களை அச்சுறுத்தி செல்போன்களையும், பணத்தையும் பறித்துசென்ற குற்றச் சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சிறப்பாக புலன்விசாரணை மேற்கொண்டு கைது செய்த போலீசாரை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார்.
மேலும், திருச்சி மாநகரில் லிப்ட் கேட்பது போன்று பொதுமக்களை அச்சுறுத்தி செல்போன்களையும், பணத்தையும் பறித்து செல்லும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கஞ்சா பறிமுதல்
*திருச்சி, ராம்ஜிநகர் பெரிய தெருவில் கஞ்சா விற்றதாக ராம்ஜிநகர் மில் காலனியை சேர்ந்த அய்யப்பன் (43) என்பவரை எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
*திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை ரோடு ஹவுசிங் போர்டு பகுதியில் கஞ்சா விற்றதாக சங்கிலியாண்டபுரம் இளங்கோ தெருவை சேர்ந்த விக்கி என்கிற டேனியேல் விக்கி (22) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. கைதான விக்கி மீது பாலக்கரை மற்றும் கே.கே.நகர் போலீஸ் நிலையங்களில் கொலை மிரட்டல் விடுத்தல், கஞ்சா விற்றதாக ஏற்கனவே 5 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மொபட் திருட்டு
*விராலிமலை அருகே உள்ள தென்னிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமலை (42). இவர் கடந்த 26-ந் தேதி தனது மொபட்டில் திருச்சி வந்தார். திருச்சி பாலக்கரை மெயின் ரோட்டில் உள்ள ஒரு டிரேடர்ஸ் முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு மீண்டும் வந்து பார்த்தபோது, யாரோ திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மொபட்டை திருடிய தென்னூர் அண்டகொண்டான் பகுதியைச் சேர்ந்த பெரோஸ்கான் (38) என்பவரை கைது செய்தனர்.
லாட்டரி சீட்டு விற்பனை
*திருச்சி கீழபுதூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (53). இவர் 10 நாட்களுக்கு முன்பு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளது. ஆனால் அதற்கான தொகையை லாட்டரி விற்பனையாளர்களிடம் கேட்ட போது பரிசு தொகையை கொடுக்காமல் அவரை மிரட்டி விரட்டி உள்ளனர். இது குறித்து பொன்மலை போலீசில் மாணிக்கம் புகார் அளித்தார். அதன் பேரில் லாட்டரி சீட்டுக்கான பரிசுத்தொகை தராமல் ஏமாற்றிய சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரை சேர்ந்த குமார் (36) மற்றும் ஞானசேகர் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமார் மீது லாட்டரி சீட்டுகள் விற்றதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் 13 வழக்குகள் உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்