அரசு பஸ் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்
சிதம்பரம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
அண்ணாமலை நகர்,
சிதம்பரத்தில் இருந்து நேற்று இரவு அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் மயிலாடுதுறை நோக்கி புறப்பட்டது. சிதம்பரம் புறவழிச்சாலை பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பஸ் டிரைவர் திருவாரூா் மாவட்டம் கருவங்குடியை சேர்ந்த மனோகரன்(வயது 57), சீர்காழி திருநன்றியூரை சேர்ந்த பஸ் கண்டக்டர் ராமதாஸ்(39), பஸ்சில் பயணம் செய்த சீர்காழி தாலுகா சோதியகுடி கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் (57), கடலூர் சிப்காட் பகுதியை சேர்ந்த முருகவேல் (38), அவரது மனைவி கலா (35), சீர்காழி தாலுகா புளியந்துறை காளியப்பன் (52) ஆகிய 6 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான அரசு பஸ்சை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.