பள்ளி, கல்லூரி மாணவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேச்சு
சுதந்திரபோராட்ட தியாகிகளின் வரலாற்றை பள்ளி, கல்லூரி மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கேட்டுக்கொண்டார்.
ராணிப்பேட்டை
சுதந்திரபோராட்ட தியாகிகளின் வரலாற்றை பள்ளி, கல்லூரி மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கேட்டுக்கொண்டார்.
நிறைவு விழா
ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிறுத்தத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் 75-வது சுதந்திர தின விழா, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவாக கடந்த ஒரு வார காலமாக கொண்டாடப்பட்டது. இதில் விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு பற்றிய புகைப்பட கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்க கண்காட்சியும் நடந்தது. இதன் நிறைவு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
தெரிந்துகொள்ள வேண்டும்
நம் நாட்டின் விடுதலைக்காக பல தலைவர்கள் பல போராட்டங்களை கண்டு, அவர்களுடைய உயிரைத் தந்து, நமக்கு விடுதலையை பெற்றுத் தந்து இருக்கிறார்கள். சுதந்திர போராட்ட தியாகிகள் வரலாறு குறித்து மாணவ- மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழக முதல்-அமைச்சர், தமிழ்நாட்டினை பல்வேறு நிலைகளில் உயர்த்தி, முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறார். பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக குறைக்கவேண்டும். பிளாஸ்டிக் இல்லாத ராணிப்பேட்டை என்ற நிலையை அடைய அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலை நிகழ்ச்சி
இதில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மாநில, மாவட்ட அளவில் சுதந்திர போராட்ட காலகட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் புகைப்படங்களை வருங்கால தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் காட்சிப் படுத்தப் பட்டிருந்தது.
மாரத்தான், பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி, கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, சிலம்பம், கிராமிய கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், சுதந்திர உணர்வு பாடல்கள், இன்னிசை கச்சேரி, கிராமிய கலை நிகழ்ச்சிகள், உள்ளிட்ட நிகழ்ச்சிகல் நடந்தது.
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலைக்குழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றதை மாவட்ட கலெக்டர் பொது மக்களுடன் அமர்ந்து கண்டுகளித்தார். கட்டுரை, ஓவியம், பேச்சு, ஆகிய போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த 9 மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும், பல்துறை பணி விளக்கக் கண்காட்சியில் அரங்குகள் அமைத்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு, நினைவு பரிசினையும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முகமது அஸ்லம், ராணிப்பேட்டை நகர மன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக், சுய வேலைவாய்ப்பு பயிற்சித்துறை துர்கா பிரசாத், யோகா மற்றும் இயற்கை மருத்துவர் சசிரேகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, வாலாஜா தாசில்தார் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.