ஆசிரியர் வீட்டில் சிக்கிய மான்கொம்பு
திருவாடானை அருகே ஆசிரியர் வீட்டில் மான்கொம்பு சிக்கியது.
தொண்டி,
திருவாடானை தாலுகா மங்கலக்குடியை அடுத்த கடம்பூர் தெற்கு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 28). கண் பார்வையற்றவரான இவர் மங்கலகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவரது வீட்டில் மான் கொம்பு இருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் நேற்று காலை இவரது வீட்டை வனத்துறை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.சோதனையின்போது ஆசிரியர் பழனியின் வீட்டின் பின்புறம் உள்ள சந்தில் ஒரு சாக்குப்பையில் மான் கொம்பு இருந்தது தெரியவந்துள்ளது.அதனை கைப்பற்றிய வனத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக ஆசிரியர் பழனி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.அதன் பின்னர் ஆசிரியர் பழனியை விசாரணைக்காக வனத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த திருவாடானை தாசில்தார் செந்தில் வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் ஷகிலா பேபி, கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.