நீர் மேலாண்மை திட்டங்களில் கவனம் செலுத்தாவிட்டால் தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும்

நீர் மேலாண்மை திட்டங்களில் கவனம் செலுத்தாவிட்டால் தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

Update: 2022-03-31 18:35 GMT
மதுரை,
நீர் மேலாண்மை திட்டங்களில் கவனம் செலுத்தாவிட்டால் தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குடிமராமத்து பணிகள்
கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங் களிலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. இந்த குடிநீர் பஞ்சத்தை போக்க ஜெயலலிதா அனைத்து மாவட்டங் களிலும் கூட்டுக்குடிநீர் திட்டங்களை கொண்டு வந்தார். 
அதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சரான எடப்பாடி பழனிசாமி, எதிர்கால சந்ததிகளின் நலன்கருதி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த குடிமராமத்து பணிகளை மேற் கொண்டார். பொதுப்பணித்துறை கண்மாய்கள் மட்டுமின்றி ஊராட்சி கண்மாய்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 86 கண்மாய்களிலும் தூர்வாரும் பணியினை செய்தார். 
மதுரை மாவட்டத்தில் செல்லூர், மாடக்குளம், வண்டியூர் உள்பட 100-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் தூர்வாரப்பட்டன.
இதன்காரணமாக கண்மாய்களில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கப்பட்டது. சுமார் 60 ஆண்டுகள் தண்ணீர் பார்க்காத கண்மாய்கள் கூட நிரம்பி வழிந்தன.
முக்கியத்துவம்
 ஜெயலலிதாவின் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் குடிமராமத்து பணிகளால் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை உருவானது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நீர்மேலாண்மை திட்டங்களுக்கு முக்கியவத்துவம் கொடுக்கப்பட்டன. அதனால் இந்தியாவிலேயே தமிழகம் நீர்மேலாண்மையில் முதலிடம் பெற்று மத்திய அரசிடம் இருந்து விருதுகளை பெற்றது.
மதுரை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டன. 50 ஆண்டுகளுக்கு மதுரை நகரில் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் இருக்க மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.1262 கோடி செலவில் முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. கிராமப்புறங்களில் ஒவ்வொரு வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க மத்திய அரசின் ஜல்சக்தி திட்டம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. 
நிலத்தடி நீர்
வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு மதுரையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டன. மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சத்தை போக்கியது ஜெயலிதா அரசு.
ஆனால் தற்போது தி.மு.க. அரசு நீர் மேலாண்மை திட்டங் களுக்கு முக்கியவத்துவம் கொடுக்க வில்லை. முல்லை பெரியாறு குடிநீர் திட்டம், ஜல்சக்தி திட்டம் ஆகிய திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. நிதி மேலாண்மை உள்பட குடிமாரத்து பணிகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வில்லை. 
அதனால் தமிழகத்தில் வரும் ஆண்டுகளில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது கோடை காலத்தில் குடிநீர் வினியோகத்தை சீராக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டன. தற்போது கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் மக்களின் நீர் தேவை அதிகமாகும். 
முன்னெச்சரிக்கை
அதனை கருத்தில் கொண்டு மதுரை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நீர்நிலை தொட்டிகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். பழுதான மோட்டார்கள், சேதமடைந்த குழாய்கள் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும். குடிநீர் வினியோகம் குறித்த பொதுமக்களின் புகார்களை பெற சிறப்பு எண்களை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்