வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பு கள்ளக்குறிச்சியில் ரூ.200 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.200 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

Update: 2022-03-28 16:41 GMT
கள்ளக்குறிச்சி, 

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நாடுதழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கின.

இதில், தபால், வருமான வரித்துறை, வங்கிகள், மின்சாரம், காப்பீடு, நெடுஞ்சாலைகள், போக்குவரத்து என பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் தொழிலாளர் அமைப்புகளும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.

 இந்த 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் முதல்நாளான, நேற்று  விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள்  வழக்கம்போல் இயங்கின. 

ஆனால் மத்திய அரசு அலுவலகங்களான தபால் நிலையங்கள், வங்கிகள், வருமான வரித்துறை, காப்பீடு அலுவலகங்களில் ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த அலுவலகங்கள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன.

 இதனால் தபால் பட்டுவாடா, தபால்களை சேகரிக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடங்கின. அதுபோல் எல்.ஐ.சி. அலுவலகங்களிலும் அதிகாரிகள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். பெரும்பாலான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் பணம் வசூல் பணி, பாலிசிதாரர்களின் சேவை, புது வணிக பணிகள் உள்ளிட்டவை முற்றிலும் பாதிக்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 100 வங்கி கிளைகள் உள்ளன. இதில் பணிபுரியும் சுமார் 600-க்கும்  மேற்பட்ட ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதில் கள்ளக்குறிச்சி நகரில் உள்ள 14 வங்கிகளில் பணிபுரியும் 130 ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். 

இதன் மூலம் மாவட்டத்தில் நேற்று சுமார் ரூ.200  கோடிக்கு மேல் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு இருக்கும் என்று வங்கி ஊழியர்கள் தரப்பில் தெரிவித்தனர். ஆனால் தனியார் வங்கிகள் வழக்கம் போல் இயங்கின. 

மேலும் செய்திகள்