7 இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்
ஊட்டி, கூடலூர் உள்பட நீலகிரியில் 7 இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 818 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடலூர்
ஊட்டி, கூடலூர் உள்பட நீலகிரியில் 7 இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 818 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியல்
ஊட்டி ஏ.டி.சி.யில் தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 149 பேரை போலீசார் கைது செய்து மினி பஸ்கள், வேனில் ஏற்றி தனியார் மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.
மேலும் மஞ்சூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 79 பெண்கள் உள்பட 123 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மேலும் ஊட்டி தலைமை தபால் அலுவலகம் முன்பு தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது
கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகி முகமது கனி தலைமையில் தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி நெடுஞ்செழியன், சி.ஐ.டி.யு. சுரேஷ், மணி, ஏ.ஐ.டி.யு.சி. குணசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சகாதேவன் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கொடிகளை ஏந்தியவாறு மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 193 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
வாக்குவாதம்
கோத்தகிரி பகுதியில் ஒரு சில அரசு பஸ்களை தவிர, மற்ற பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பஸ் நிலையத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோஷங்கள் எழுப்பியவாறு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியாக வந்த குன்னூருக்கு செல்லும் அரசு பஸ்சை தடுத்து டிரைவர் மற்றும் கண்டக்டருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பஸ்சின் முன்பு அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி பஸ்சை விடுவித்தனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 90 பெண்கள் உள்பட 150 பேரை கைது செய்தனர். இதையொட்டி கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் 7 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் 531 பெண்கள் உள்பட 818 பேர் கைது செய்யப்பட்டனர்.