நீலகிரியில் 76 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை

தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் காரணமாக நீலகிரியில் 76 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். மேலும் வங்கி சேவை முடங்கியது.

Update: 2022-03-28 14:31 GMT
ஊட்டி

தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் காரணமாக நீலகிரியில் 76 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். மேலும் வங்கி சேவை முடங்கியது.

தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., எல்.பி.எப்., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டனர். 

இதன் காரணமாக நீலகிரியில் உள்ள 6 போக்குவரத்து பணிமனைகளில் இருந்து காலை 6 மணிக்கு மேல் வெளியிடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஊட்டியில் 2 போக்குவரத்து பணிமனைகளில் அரசு பஸ்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. சென்னை, கன்னியாகுமரி, செங்கோட்டை போன்ற வெளியிடங்களில் இருந்து வந்த அரசு விரைவு பஸ்கள் மற்றும் பணிமனைக்கு திரும்பிய பஸ்களில் பயணிகள் வந்தனர். 

மாணவ-மாணவிகள் அவதி

ஊட்டியில் இருந்து கோவை, குன்னூர், கூடலூர் போன்ற இடங்களுக்கு செல்ல அரசு பஸ்கள் இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், கூலி தொழிலாளர்கள் உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

இதனால் அவர்கள் வழக்கம்போல் இயக்கப்பட்ட ஆட்டோக்கள், தனியார் மினி பஸ்கள், வாடகை வாகனங்களில் சென்றனர். இருப்பினும் வாடகை வாகனங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.  அண்ணா தொழிற்சங்கம் உள்பட 2 தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடாமல் தொடர்ந்து பஸ்களை இயக்கினர். மேலும் ேமட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் இயங்கியது. 

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் சில பஸ்கள் மட்டும் மதியம் 12 மணி வரை ஓடியது.ஆனால் சென்னை, கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு வழக்கம்போல் தொலைதூர சொகுசு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் ஆட்டோக்கள், ஜீப்புகள், சுற்றுலா வாகனங்கள், மினி பஸ்கள் மற்றும் கர்நாடக அரசு பஸ்களும் வழக்கம் போல் இயங்கியது. 

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, நீலகிரி போக்குவரத்து கழக மண்டலத்தில் 330 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 24 சதவீதம் அதாவது 40 அரசு பஸ்கள் மட்டும் கோவை, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படுகிறது என்றனர். தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

ரூ.50 கோடி பரிவர்த்தனை பாதிப்பு

அரசு ஊழியர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் சில பிரிவு அலுவலகங்கள் ஊழியர்கள், பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி இருந்தது. இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. தபால் ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் தலைமை தபால் அலுவலகம் உள்பட கிளை அலுவலகங்கள் வெறிச்சோடின. இதனால் அங்கு வந்த வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவது, ஆதார் அட்டைகளில் திருத்தம் மேற்கொள்வது போன்ற பணிகள் நடைபெறாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். 

தபால் பட்டுவாடா செய்வது பாதிக்கப்பட்டது. இதேபோன்று எஸ்.பி.ஐ., இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தவிர பிற வங்கிகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிகள் மூடப்பட்டு சேவை முடங்கியதால், ரூ.50 கோடிக்கு மேல் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்