ஆற்றில் புதிய தடுப்பணை தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்
கூத்தாநல்லூர் அருகே ஆற்றில் புதிய தடுப்பணை தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே ஆற்றில் புதிய தடுப்பணை தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது
கூத்தாநல்லூர் அருகே உள்ள காடுவெட்டியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் தேக்கி கொண்டு செல்லும் வகையில் வெண்ணாற்றின் குறுக்கே தடுப்பணை தடுப்பு சுவர் கட்டப்பட்டது. இதன் மூலம் ஆற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை நாகங்குடி பாசன வாய்க்கால் மற்றும் ஏனைய பாசன வாய்க்கால் மூலம் அப்பகுதி விவசாயிகள் நெல், பருத்தி, உளுந்து பயறு சாகுபடி பணிகளுக்கு கொண்டு சென்று சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக காடுவெட்டியில் வெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை தடுப்பு சுவர் பழுதடைந்து இடிந்து விழுந்தது.
புதிய தடுப்பணை தடுப்பு சுவர்
இதனால் தடுப்பு சுவர் இடிந்து விழுந்த நிலையில் ஆற்றில் வரும் தண்ணீர் தேங்கி நிற்காமல் சென்று விடுகிறது. கடந்த 8 வருடங்களுக்கும் மேலாக பாசன வாய்க்கால் மூலம் தேவையான தண்ணீரை வயல்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் உள்ளது. ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் கூட பம்பு செட் மூலம் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் விவசாய பணிகளை மேற்கொள்ள சிரமமாக உள்ளது. தற்போது ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. எனவே வருகிற ஜூன் மாதம் தண்ணீர் திறப்பதற்கு முன்பாக பழுதடைந்த தடுப்பணை தடுப்பு சுவரை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய தடுப்பணை தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.