ஆம்பூர் அருகே கார்கள் மோதலில் வேலூர் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் பலி

ஆம்பூர் அருகே கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் வேலூர் தனியார் மருத்துவமனை டாக்டர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-03-28 13:25 GMT
ஆம்பூர்

ஆம்பூர் அருகே கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் வேலூர் தனியார் மருத்துவமனை டாக்டர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

டாக்டர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தண்டுக்காரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 41). மயக்கவியல் டாக்டரான இவர் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார். வேலூரில் இருந்து தர்மபுரி நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் சென்றபோது சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த இசாம் (வயது 28) என்பவர் எதிரே காரில் வந்து கொண்டிருந்தார். காரில் அவரது தந்தை ஏஜாஸ் அஹமத், தாயார் பாய்சா ஆகியோர் இருந்தனர்.

இந்த நிலையில் இசாம் ஓட்டி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடியதில் டாக்டர் சுரேஷ்குமார் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது.
 
இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி டாக்டர் சுரேஷ்குமார் படுகாயம் அடைந்தார். அதேபோல் இசாம் உள்பட அவரது காரில் வந்த 3 பேரும் காயம் அடைந்தனர்.

சாவு

அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டாக்டர் சுரேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது. 

இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்