மரங்களில் ஆணி அடிப்பவர்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வலியுறுத்தல்
மரங்களில் ஆணி அடிப்பவர்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மொத்தம் 142 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் அரசு துறைகளின் சார்பில் 19 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 650 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முரளிதரன் வழங்கினார்.
கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் தலைமையில், மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல் மற்றும் நிர்வாகிகள், கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், "தேனி மாவட்டத்தில் சுமார் 7 ஆயிரம் மரங்களில் இருந்து 300 கிலோ ஆணிகள் அகற்றப்பட்டன. அவ்வாறு ஆணிகள் அகற்றப்பட்ட மரங்களில் மீண்டும் சில வணிக நிறுவனங்கள் ஆணிகளை அடித்தும், கம்பிகளால் இறுக்கிக் கட்டியும் பதாகைகளை தொங்கவிட்டுள்ளனர். இதுபோன்ற செயல்களால் மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. எனவே, ஆணிகள் அடித்து மரங்களை சேதப்படுத்தும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
நிதி நிறுவனம் மிரட்டல்
தேனியை அடுத்த சுக்குவாடன்பட்டியை சேர்ந்த பெண்கள் சிலர் கொடுத்த மனுவில், "நாங்கள் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தோம். அந்த கடன் தொகையை முழுவதும் திருப்பி செலுத்தி விட்டோம். எங்களிடம் பணம் வசூல் செய்த முகவர் அந்த பணத்தை நிறுவனத்தில் செலுத்தாமல் வேலையில் இருந்து நின்று விட்டதாக தெரிகிறது. இதனால், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் சார்பில், கடனை திருப்பி செலுத்திய எங்களிடம் மீண்டும் பணம் செலுத்த வலியுறுத்தியும், மிரட்டியும் வருகின்றனர். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் போடி சட்டமன்ற தொகுதி செயலாளர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "போடி அருகே ராசிங்காபுரத்தில் உள்ள மயானத்தில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க வேண்டும். சிவலிங்கநாயக்கன்பட்டியில் உள்ள குளத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். சிலமலை ஊராட்சியில் வினியோகம் செய்யும் குடிநீரில் ஏதோ படிமங்கள் கலந்து வருகிறது. இந்த குடிநீரை ஆய்வுக்கு உட்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
கடமலை-மயிலை ஒன்றியம் தங்கம்மாள்புரம் பகுதியை சேர்ந்த செங்கல்சூளை உரிமையாளர்கள், செங்கல் சூளை உரிமம் புதுப்பித்தல் மற்றும் புதிதாக உரிமம் வழங்குதல் தொடர்பாகவும் மண் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.