அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் பெரிதும் பாதிப்பு
அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் பெரிதும் பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் பொதுவேலைநிறுத்தத்தால் அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடைகள் அனைத்தும் வழக்கம் போல் திறந்து இருந்தன.
பொதுவேலைநிறுத்தம்
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்தம் நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் எல்.பி.எப்., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., எம்.எல்.எப். ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பனியன் உற்பத்தியாளர்கள், வணிகர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோரிடம் ஆதரவு திரட்டப்பட்டது.
அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், பி.எஸ்.என்.எல்., தபால்துறை, வங்கி ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று காலை வேலைநிறுத்தம் தொடங்கியது. அரசு போக்குவரத்து கழகத்தில் தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர், கண்டக்டர் உள்ளிட்டவர்கள் முழுமையாக வேலைநிறுத்தத்தில் பங்கேற்றார்கள். இதன்காரணமாக அரசு பஸ்கள் ஓடவில்லை. மாவட்டத்தை பொறுத்தவரை திருப்பூரில் 2 பணிமனை, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, பழனி உள்பட மொத்தம் 8 பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் மொத்தம் 546 பஸ்கள் இயக்கப்படுகிறது.
அரசு பஸ்கள் இயக்காததால் அவதி
போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்றதால் அரசு பஸ்கள் மிக குறைந்த அளவே இயக்கப்பட்டன. மொத்தமாக 60 பஸ்கள் இயக்கப்பட்டன. நகர்புறம் மற்றும் பக்கத்து மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் சில இயக்கப்பட்டன. சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்வதற்காக நேற்று காலை மாணவ-மாணவிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். ஆனால் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி செல்ல முடியாமல் தவித்தனர். பல மாணவர்கள் வீடு திரும்பினார்கள். பெற்றோர் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு வந்து விட்டனர்.
தனியார் பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டன. அதுபோல் மினிபஸ்கள் இயக்கப்பட்டன. ஷேர் ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. இதனால் தனியார் பஸ், மினிபஸ், ஷேர் ஆட்டோக்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிலர் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. அதுபோல் வெளியூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்தவர்கள் பஸ் நிலையங்களில் காத்திருந்ததை காண முடிந்தது. நேற்றுமுன்தினம் இரவு வெளிமாவட்டங்களில் இருந்து புறப்பட்டவர்கள் அரசு பஸ்களில் திருப்பூர் வந்தனர். ஆனால் நகர பஸ்கள் இயக்கப்படாததால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ரெயில் நிலையத்தில் கூட்டம்
பனியன் நிறுவன தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் தவித்தனர். வெளிமாவட்டத்தில் இருந்து நேற்றுமுன்தினம் புறப்பட்டு திருப்பூர் நோக்கி வந்த பஸ்கள், மீண்டும் சொந்த மாவட்டத்துக்கு சென்றன. இதனால் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து தேனி, நாகர்கோவில், மதுரை, திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு சில பஸ்கள் காலையில் இயக்கப்பட்டன.
ரெயில்கள் வழக்கம் போல் ஓடின. இதனால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள் ரெயில் பயணத்தை தேர்வு செய்ததால் ரெயில் நிலையத்தில் பயணிகள் அதிகமாக காணப்பட்டனர்.
கடைகள் திறந்து இருந்தன
திருப்பூரில் கடைகள் முழுமையாக திறக்கப்பட்டு இருந்தன. வழக்கம் போல் கடைகள் செயல்பட்டன. பெட்டிக்கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை செயல்பட்டன. ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், டீக்கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன.
இதுபோல் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதிய, மதிப்பூதிய முறைகளை களைந்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். திருப்பூர் கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகங்கள், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் ஆகியவற்றில் அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை 300-க்கும் மேற்பட்டவர்கள் பணிக்கு வரவில்லை. மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள் 550க்கும் மேற்பட்டவர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றார்கள். இதனால் அரசு அலுவலக பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.