ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தபால்நிலையம் முன்பு அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி (எம்.எல்.பிரிவு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தேனி மாவட்ட செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது, நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை உடனடியாக குறைக்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை 250 வேலைநாட்களாக உயர்த்தவேண்டும், ஒருநாள் கூலியை ரூ.500 ஆக உயர்த்தவேண்டும், விவசாயதொழிலாளர்கள் அனைவருக்கும் தலா 5 சென்ட் இலவச வீட்டுமனை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட துணைச்செயலாளர் இளையராஜா, துணைத்தலைவர் மாரியம்மாள், மாவட்ட பொருளாளர் ஞானம்மாள் மற்றும் நிர்வாகிகள் ஈஸ்வரன், ராஜாராம், சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
முன்னதாக அவர்கள் ஆண்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து கட்சிக்கொடிகளை கைகளில் ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து தபால்நிலையத்தை வந்தடைந்தனர்.