தேனி மாவட்டத்தில் 80 சதவீதம் அரசு பஸ்கள் ஓடவில்லை வங்கிகள் வெறிச்சோடின
பொது வேலை நிறுத்தம் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் 80 சதவீதம் அரசு பஸ்கள் ஓடவில்லை. வங்கிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
தேனி:
80 சதவீத பஸ்கள் ஓடவில்லை
நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் எதிரொலியாக தமிழகத்தில் பஸ் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் அரசு பஸ் போக்குவரத்து கழக பணியாளர்கள் பெரும் அளவில் போராட்டத்தில் பங்கேற்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 2,800 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 1,500 பேர் இன்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து 360 பஸ்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால், இன்று மாலை நிலவரப்படி 75 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. சுமார் 20 சதவீத பஸ்கள் மட்டுமே இயங்கியது. இதனால், 80 சதவீதம் பஸ்கள் இயக்கப்படாமல் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
தனியார் பஸ்கள்
குறிப்பாக அதிகாலை மற்றும் காலை நேரத்தில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் பரிதவித்தனர். அதே நேரத்தில் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. இதனால், பஸ் நிலையங்களில் அரசு பஸ்களை விடவும் தனியார் பஸ்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.
கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை 1-ல் உள்ள 40 பஸ்களில் 2 பஸ்களும், கிளை 2-ல் உள்ள 68 பஸ்களில் 12 பஸ்களும் மட்டுமே இயக்கப்பட்டன. 96 பஸ்கள் இயக்கப்படவில்லை.
வெறிச்சோடிய வங்கிகள்
தேனி மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகளில் சுமார் 1,200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 700 பேர் இன்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால், வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. வங்கிகளில் காசோலை, வரைவோலை பரிவர்த்தனை, நகைக்கடன், விவசாய பயிர்க்கடன், தொழிற்கடன் வழங்குதல் உள்ளிட்டபணிகள் பாதிக்கப்பட்டன. இன்று ஒரே நாளில் சுமார் ரூ.15 கோடி அளவில் பணபரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.