பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; திருமாவளவன் எம்.பி. பேட்டி
பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று திருமாவளவன் எம்.பி. கூறினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) நடத்தும் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க அமைப்புகளும், அரசு ஊழியர்கள் அமைப்புகளும் பங்கேற்கும். பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முதல்-அமைச்சரின் வெளிநாடு பயணம், அவரின் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள். முதல்-அமைச்சர் மீது எந்த ஆதாரமும் இல்லாமல், கவன ஈர்ப்புக்காக, ஊடகங்கள் தங்களை பற்றி விவாதிக்க வேண்டும் என்ற தற்காலிக இச்சைக்காக இப்படிப்பட்ட அவதூறுகளை பா.ஜ.க. பரப்புகிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியது. தொடர்ந்து 2-வது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வினால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. வேலை வாய்ப்பின்மையை சரி செய்ய முடியவில்லை. ஆனால் மக்களிடம் வெறுப்பு அரசியலை விதைக்கிறார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள், என்றார்.