பாதுகாப்பு கேட்டு காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
பாதுகாப்பு கேட்டு காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமம் குட்டையர்த்தெருவை சேர்ந்த சேகரின் மகன் சரத்குமார்(வயது 22). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இதேபோல் சிறுகடம்பூர் கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் மகள் ரவீனா(19). இவர் அரியலூர் அரசு கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சரத்குமார், ரவீனா ஆகியோருக்கு இடையே இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது. கடந்த 6 மாதமாக அவர்கள் காதலித்து வந்தநிலையில், இது பற்றி ரவீனாவின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. காதலுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ரவீனாவிற்கு வேறொரு வாலிபருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 25-ந் தேதி சரத்குமார், ரவீனா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி, திருச்சியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, வெள்ளனூரில் உள்ள சரத்குமாரின் பெரியப்பா வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் ரவீனாவை காணவில்லை என அவரது தாய் செந்தமிழ்ச்செல்வி, இரும்புலிக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் காதல் திருமண ஜோடி பாதுகாப்பு கேட்டு ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தி, இது குறித்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து இரு குடும்பத்தினரையும் சமாதானம் செய்த போலீசார், ரவீனாவை சரத்குமார் குடும்பத்துருடன் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ரவீனாவின் தாய் செந்தமிழ்ச்செல்வி, தாய்மாமன் பழனிவேல் ஆகியோர் தங்கள் பேச்சை கேட்காத பெண், தங்களுக்கு தேவை இல்லை என்று கூறி போலீசாருடன் தகராறு செய்து, கோபத்துடன் சென்றனர். இதனால் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.