வனவிலங்கு என நினைத்து சுட்டபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சாவு
வனப்பகுதியில் வேட்டையாட சென்றபோது வனவிலங்கு என நினைத்து சுட்டபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக 12 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
சிவமொக்கா: வனப்பகுதியில் வேட்டையாட சென்றபோது வனவிலங்கு என நினைத்து சுட்டபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக 12 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வனவிலங்கு வேட்டை
சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா நோனபூா் மற்றும் அருளிசுருளி பகுதிகளை சேர்ந்த 12 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள அம்புதீர்த்தா வனப்பகுதியில் வேட்டையாட சென்றுள்ளனர். அவர்களுடன் மேலினகொப்பாவை சேர்ந்த காந்தராஜ் (வயது 46) என்பவரும் சென்றதாக தெரிகிறது. இவர் நோனபூர் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஆவார்.
இந்த நிலையில் அவர்கள் தனித்தனி குழுவாக பிரிந்து வனவிலங்கை தேடினார்கள். அப்போது காந்தராஜ் தனியாக சென்றதாக தெரிகிறது.
துப்பாக்கி குண்டு பாய்ந்து சாவு
அந்த சமயத்தில், துப்பாக்கி வைத்திருந்தவர் வனவிலங்கு என நினைத்து காந்தராைஜ நோக்கி சுட்டுள்ளார். அப்போது அந்த குண்டு காந்தராஜின் மார்பில் பாய்ந்துள்ளது. இதில் காந்தராஜ் சுருண்டு கீழே விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள், காந்தராஜை மீட்டு சிகிச்சைக்காக தீர்த்தஹள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அப்போது காந்தராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தீர்த்தஹள்ளி போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மந்திரி அரக ஞானேந்திரா ஆறுதல்
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வனவிலங்கை வேட்டையாட சென்றபோது, விலங்கு என நினைத்து காந்தராஜை சுட்டு கொன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக தீர்த்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேட்டையாட சென்ற 12 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் தீர்த்தஹள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வும், உள்துறை மந்திரியுமான அரக ஞானேந்திரா ஆஸ்பத்திரிக்கு சென்று உயிரிழந்த காந்தராஜின் உடலை பார்வையிட்டார். மேலும் அவரது குடும்பத்துக்கு அரக ஞானேந்திரா ஆறுதல் கூறினார். உயிரிழந்த காந்தராஜிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.