மைனர்பெண், இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளியதாக மங்களூருவில் 16 பேரை ‘போக்சோ’ சட்டத்தில் கைது
மைனர்பெண், இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளியதாக மங்களூருவில் 16 பேரை ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் ஹரிராம் சங்கர் தெரிவித்துள்ளார்
மங்களூரு: மைனர்பெண், இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளியதாக மங்களூருவில் 16 பேரை ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் ஹரிராம் சங்கர் தெரிவித்துள்ளார்.
விபசார கும்பல்
கர்நாடக கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவின் தலைநகர் மங்களூருவில் பெரிய அளவில் விபசாரம் நடந்து வருகிறது. மைனர்பெண்கள், ஏழை இளம்பெண்களை குறிவைத்து மர்மநபர்கள் அவர்களிடம் ஆசைவார்த்தைகள் கூறி விபசாரத்தில் தள்ளும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த விபசார கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், மங்களூருவில் பெரிய அளவில் விபசார தொழில் நடத்தி வந்த 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் ஏழை இளம்பெண்கள், மைனர்பெண்களை ஆசைவார்த்தைகள் கூறியும், பண ஆசை காட்டியும் விபசாரத்தில் தள்ளி உள்ளனர்.
16 பேர் கைது
இதுதொடர்பாக மங்களூரு மாநகர துணை போலீஸ் கமிஷனர் ஹரிராம் சங்கர் கூறியதாவது:-
மங்களூரு நகரில் பெரிய அளவில் விபசாரம் நடந்து வந்தது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி 16 பேரை கைது செய்துள்ளோம். இவர்கள் கல்லூரி மாணவிகள், ஏழை இளம்பெண்கள், மைனர்பெண்கள் போன்றவர்களை இலக்காக கொண்டு ஆசைவார்த்தைகள் கூறி விபசாரத்தில் தள்ளி உள்ளனர்.
இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தியேட்டர், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை பெண்கள், மைனர்பெண்களை கண்டறிந்து அவர்களின் குடும்பத்துக்கு தெரிந்தவர்கள் போல் பேசி பழகுவார்கள். அவர்களுடன் நட்பாக பழகி, அவர்களின் நம்பிக்கையை பெற்று அவர்களுடன் நெருங்கி பழகுவார்கள்.
ஆடம்பர செலவு
பின்னர் ஏழை பெண்கள், மைனர்பெண்கள், கல்லூரி மாணவிகளின் பிரச்சினைகளை தெரிந்துகொண்டு அவர்களை கவரும் விதமாக பேசுவார்கள். பின்னர் அவர்கள், மைனர்பெண்கள், கல்லூரி மாணவிகளுக்கு பணம் கொடுப்பதுடன், அவர்களுக்கு ஆடைகள் மற்றும் பரிசு பொருட்கள் வாங்கி கொடுப்பார்கள். இதையடுத்து வணிக வளாகங்கள், தியேட்டர்களுக்கு அழைத்து சென்று ஆடம்பரமாக செலவு செய்வார்கள்.
பின்னர் அவர்களை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்து மிரட்டி விபசாரத்தில் தள்ளுகிறார்கள். அவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து இளம்பெண்களும், மைனர்பெண்களும் விபசாரத்தில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு பல பெண்களை அவர்கள் விபசாரத்தில் தள்ளி உள்ளனர்.
தைரியமாக புகார் கொடுக்கலாம்
கைதான 16 பேரும் மூடபித்ரி, உல்லால், கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு பின்னணியில் முக்கிய புள்ளிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. விபசார கும்பலுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.
இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள், மைனர்பெண்கள் தங்களுக்கு தெரியாத யாரும் வந்து பழகினாலோ, பரிசு பொருட்கள், பணம் கொடுத்தாலோ உடனடியாக பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும். விபசார கும்பலின் மிரட்டலுக்கு யாராவது சிக்கியிருந்தால் தைரியமாக முன்வந்து புகார் கொடுக்கலாம். நாங்கள் நடவடிக்கை எடுப்போம். புகார் கொடுத்தவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இது மற்ற மாணவிகள் பாதிக்கப்படாமல் இருக்க உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.