அந்தியூர் அருகே தம்பிக்கலையான் சாமி கோவில் கும்பாபிஷேகம்- ஏராளமான பக்தர்கள் தரிசனம்

அந்தியூர் அருகே தம்பிக்கலையான் சாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2022-03-27 21:46 GMT
அந்தியூர்
அந்தியூர் அருகே தம்பிக்கலையான் சாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ராஜகோபுரம்
அந்தியூர் அருகே வேம்பத்தி பொதியாமூப்பனூரில் மிகவும் பழமையானதும் பிரசித்தி பெற்றதுமான தம்பிக்கலையான் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 60 அடி உயரம் கொண்ட 5 நிலை ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கியது. இதனை கும்பகோணம் ராதாகிருஷ்ணன் சிற்பி தலைமையிலான குழுவினர் தற்போது கட்டி முடித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து 4 கால யாக பூஜைகள் நடந்தது. இதையடுத்து கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து ராமேஸ்வரத்தில் இருந்து புனித நீர் சேகரிக்கப்பட்டு யானை, குதிரை, பசு மாடு ஆகியவற்றின் மூலம் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் புனித நீர் சேகரித்துக் கொண்டு வரப்பட்ட கலசங்களை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்
நேற்று காலை முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கலசத்துக்கு வேத விற்பன்னர்கள் பூஜைகள் செய்து தீபாராதனை காண்பித்தனர். பின்னர் 5 கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் அனைவர் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள மாடசாமி, விநாயகர், வேம்பு, அரசு மரங்கள், நவக்கிரகங்களுக்கும் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் அந்தியூர் தொகுதி ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்