கார் கவிழ்ந்த விபத்தில் நகைக்கடை அதிபர் பலி
காரியாபட்டி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் நகைக்கடை அதிபர் பலியானார். இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் நகைக்கடை அதிபர் பலியானார். இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நகைக்கடை அதிபர்
காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 45). காரியாபட்டி பாண்டியன் நகரில் வசித்து வந்த இவர் நகைக்கடை நடத்தி வந்தார்.
இவரும் காரியாபட்டி கே.செவல்பட்டியை சேர்ந்த முருகேசன் (52), மந்திரி ஓடை கிராமத்தை சேர்ந்த பிச்சை (40) ஆகிய 3 பேரும் என்.நெடுங்குளம் கிராமத்தில் காதணி விழாவில் கலந்து கொண்டு விட்டு காரில் வந்து கொண்டு இருந்தனர். காரியாபட்டி - நரிக்குடி சாலையில் எஸ்.கடமங்குளம் விலக்கு அருகே வந்து கொண்டிருக்கும் போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தின் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
நகைக்கடை அதிபர் பலி
இந்த விபத்தில் ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். முருகேசனும், பிச்சையும் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காரியாபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த ராமகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.