திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு
‘ஓம் நமசிவாய’ சரண கோஷம் விண்ணை பிளக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு 25 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடந்தது.
திருக்கடையூர்:
‘ஓம் நமசிவாய’ சரண கோஷம் விண்ணை பிளக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு 25 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடந்தது
அமிர்தகடேஸ்வரர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட இந்த கோவில் அட்டவீரட்ட தலங்களில் ஒரு கோவிலாக உள்ளது. 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் கடந்த 1997-ம்ஆண்டு மார்ச் மாதம் 26-ந்தேதி குடமுழுக்கு நடைபெற்றது.
25 ஆண்டுகளுக்குப்பிறகு.....
இந்தநிலையில் கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்து திருப்பணிகள் கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக நடைபெற்றது. திருப்பணிகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்குபிறகு நேற்று குடமுழுக்கு நடைபெற்றது. இதையொட்டி கடந்த 18-ந்தேதி கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
குடமுழுக்கு
நேற்று காலை 5 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. காலை 6 மணிக்கு கடங்கள் புறப்பாடும், தொடர்ந்து குடமுழுக்கும் நடைபெற்றது. கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு காலை 9.45 மணிக்கு ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களை சென்றடைந்தது. குருக்கள் கணேசன், மகேஸ்வரர், ராமலிங்கம், சுந்தரமூர்த்தி, அமிர்தகடேஸ்வரா், ஹரி, விஜயஸ்ரீகுமார், சுவாமிநாதன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோருடன் யாகசாலை கடங்கள் எடுத்துவரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு 10.10 மணிக்கு விமான, ராஜகோபுரம் மற்றும் கோபுரங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் நமசிவாய’ என விண்ணதிர சரண கோஷம் எழுப்பினர்.
11 மணிக்கு மூலஸ்தான குடமுழுக்கும், தீபாராதனையும் நடைபெற்றது. குடமுழுக்கு தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
ஆதீனங்கள் பங்கேற்பு
குடமுழுக்கு விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பலஅடிகளார், தொண்டை மண்டலம் ஆதீனம் திருச்சிற்றம்பலம் தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார்கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், துழாவூர் ஆதீனம் நிரம்பஅழகிய தேசிக ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள், பொம்மபுரம் ஆதீனம் சிவஞானபாலய சுவாமிகள், வடலூர் தவத்திரு ஊரன் அடிகள், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, போலீஸ் சூப்பிரண்டு சுகுனாசிங், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், அறநிலையத்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர் மங்கையர்கரசி, புதுச்சேரி அமைச்சர் சந்திரபிரியங்கா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதாமுருகன், ராஜகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. பவுன்ராஜ், ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், துணைத்தலைவர் பாஸ்கரன், மாவட்ட வருவாய் அதிகாரி முருகதாஸ், திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், ஆக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன், துனைத்தலைவர் சிங்காரவேலு, டி.மணல்மேடு ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி துரைராஜன், பிள்ளை பெருமாநல்லூர் ஊராட்சி தலைவர் முனுசாமி, கிள்ளியூர் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி, மாணிக்கபங்கு ஊராட்சி மன்ற தலைவர் மோகன், தி.மு.க.ஒன்றிய இளைஞரணி செயலாளர் செந்தில், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் அமுர்தவிஜயகுமார், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குமார், அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கண்ணன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சந்துரு பிரபு, பிள்ளை பெருமாநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரவடிவேல், ஸ்தபதி கலியபெருமாள் மற்றும் ஆதீனங்கள், மடாதிபதிகள், ஐகோர்ட்டு நீதிபதிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கை காண அதிகாலை 4 மணி முதல் கோவில் வளாகத்தில் பக்தர்கள் குவிய தொடங்கினர். இதனால் திருக்கடையூரில் எங்கு நோக்கினும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாலை 6 மணிக்கு மகாஅபிசேகமும் 7.30 மணிக்கு கல்யாண வைபவமும், பாலாம்பிகை உடனாகிய காலசம்காரமூர்த்தி, பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.
குடமுழுக்கையொட்டி திருக்கடையூர் பகுதியில் ஆங்காங்கே பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.