ராமேசுவரம் கோவிலில் ரவிசங்கர் சாமி தரிசனம்
ராமேசுவரம் கோவிலில் ரவிசங்கர் சாமி தரிசனம் செய்தனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வாழும்கலை அமைப்பின் நிறுவன தலைவர் ரவிசங்கர் தனி ஹெலிகாப்டர் மூலம் நேற்று மண்டபம் முகாமில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கினார். தொடர்ந்து அங்கிருந்து கார் மூலமாக ராமேசுவரம் கோவிலுக்கு வந்தார். கோவிலில் சாமி-அம்பாள், விஸ்வநாதர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார். அப்போது வாழும் கலை அமைப்பு சார்பில் கோவிலில் 108 சங்காபிஷேகம் மற்றும் ருத்ராபிஷேக பூஜைகளும் நடைபெற்றன. அப்போது கோவில் இணை ஆணையர் பழனிக்குமார், ராமேசுவரம் நகரசபை தலைவர் நாசர்கான் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
மேலும் ரவிசங்கரிடம், நகரசபை தலைவர் நாசர்கான் அளித்த கோரிக்கை மனுவில், ராமேசுவரம் கோவிலில் ரத வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரதவீதிகளில் சாலை வழியாக நடந்தே கோவிலுக்கு பக்தர்கள் கடும் வெயிலில் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு ராமேசுவரம் கோவிலின் நான்கு ரத வீதிகளில மேற்கூரைகள் அமைத்து தரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.