திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் முள்ளாச்சி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. விழா நாட்களில் சாமி வீதிஉலா நடந்தது. திருவிழா நிறைவு நிகழ்ச்சியாக நேற்று திருத்துறைப்பூண்டி மலர் வணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விடையாற்றி விழா நடைபெற்றது. விழாவில் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதையடுத்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மலர் வணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்க தலைவர் காளிதாஸ், செயலாளர் சாமிநாதன், பொருளாளர் கணபதி, கோவில் செயல்அலுவலர் ராஜா, கணக்கர் சீனிவாசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.