தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
நீதித்துறையில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நீதித்துறை ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வெளிப்பாளையம்:
நீதித்துறையில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நீதித்துறை ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரவை கூட்டம்
தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க மாநில மையம் சார்பில் மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் மற்றும் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தேர்வு ஆகியவை நாகையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க மாநில தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். நாகை மாவட்டத்தலைவர் பாண்டியன், மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச்செயலாளர் அருணாச்சலம், மாநில பொருளாளர் கண்ணப்பிரான், மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், முன்னாள் மாநில நிர்வாகி யோகசுந்தரம் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
தமிழ்நாடு நீதித்துறையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் பணியாற்றும் மாவட்ட சிரஸ்தார் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படியை மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெறும் பொது வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கோஷங்கள் எழுப்பினர்
கூட்டத்துக்கு முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற ஊழியர் சங்கத்தினர் கோஷங்கள் எழுப்பினர். இதில் சென்னை, மதுரை ஐகோர்ட்டுகள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.