ஆலங்குடியில் பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி பலி

ஆலங்குடியில் பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-03-27 17:28 GMT
ஆலங்குடி:
நண்பர்களுடன் குளிக்க...
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்தவர் முகமது உசேன். இவரது மகன் அபுபக்கர் சித்திக் (வயது 14). இவர் ஆலங்குடியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் இன்று சக நண்பர்களுடன் ஆலங்குடி அருகே உள்ள நெம்மக்கோட்டை உடையார்தெருவில் உள்ள புதுகுளத்தில் குளிப்பதற்கு சென்றுள்ளார். 
அங்கு தனது நண்பர்களுடன் குளத்தில் குளித்து கொண்டிருந்தான். இதில் யாருக்கும் நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. இதில் அபுபக்கர் மட்டும் குளத்தில் மூழ்கினார்.
மாணவன் பலி
 இதைப்பார்த்த சக நண்பர்கள் அருகில் இருந்தவர்களை அழைத்து வந்து குளத்தில் தேடினர். ஆனால் வெகு நேரம் கழித்து அபுபக்கரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அபுபக்கரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்