முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணத்தின் மூலமாக விழுப்புரம் மாவட்டத்துக்கு ஒரு தொழிற்சாலை வருகிறது அமைச்சர் பொன்முடி பேச்சு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணத்தின் மூலமாக விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு தொழிற்சாலை வருகிறது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நேற்று காலை விழுப்புரத்தில் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். டாக்டர் ஆர். லட்சுமணன் எம்.எல்.ஏ., மாநில விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர் சிவா, மாவட்ட அவை தலைவரும், ஊராட்சி குழு தலைவருமான ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர்கள் செ.புஷ்பராஜ் முருகன், மைதிலி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை
தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், அமைச்சருமான பொன்முடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு, வருகிற 5-ந்தேதி முதல் முறையாக விழுப்புரம் மாவட்டத்துக்கு அவர் வருகை தர இருக்கிறார்.
இதில் அவர் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியாக வானூர் அருகே கொழுவாரியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைக்க உள்ளார். பின்னர் திண்டிவனம் அருகே சிப்காட் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.
தொழிற்சாலை
விழுப்புரம் மாவட்டம் எப்போதும் தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் கட்சியினர் செயல்பட வேண்டும். முதல்-அமைச்சர் துபாயில் இருந்த போதும் தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டு பணிகளை கண்காணித்து வருகிறார். பல தொழில் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஒரு தொழிற்சாலை வர இருக்கிறது.
உயர்கல்வி படிக்க செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகைத் திட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், விழுப்புரம் நகரசபை தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, நகர செயலாளர்கள் சக்கரை, ஜீவா, மாநில பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, கல்பட்டு ராஜா, மும்மூர்த்தி, பிரபாகரன், தெய்வசிகாமணி, விசுவநாதன், ஜெயரவிதுரை, மாவட்ட இளைஞரணி செயலாளர் தினகரன், மாவட்ட மாணவரணி செயலாளர் ஸ்ரீ வினோத், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கோல்டு வெங்கடேசன், ஒன்றியக்குழு தலைவர்கள் சச்சிதானந்தம், கலைச்செல்வி, வாசன், சங்கீதா அரசி, தொண்டரணி அமைப்பாளர் கபாலி, நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.