வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அத்துமீறலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை
வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலின்போது அத்துமீறலில் ஈடுபட்ட தி.மு.க.வினரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் சமீரனிடம் அ.தி.மு.க.வினர் புகார் மனு கொடுத்தனர்.
கோவை
வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலின்போது அத்துமீறலில் ஈடுபட்ட தி.மு.க.வினரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் சமீரனிடம் அ.தி.மு.க.வினர் புகார் மனு கொடுத்தனர்.
கலெக்டரிடம் மனு
வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க.வினர் அத்துமீறல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதில், செ.தாமோதரன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அ.தி.மு.க. வக்கீல் இன்பதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவிட்டும் தேவையான போலீஸ் பாதுகாப்பு போடவில்லை. காளீஸ்வரி என்ற தி.மு.க. பெண் கவுன்சிலர் வாக்குசீட்டை கிழித்தெரிந்துள்ளார். இது தேர்தல் விதிப்படி தவறு. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.மு.க.வினர் வன்முறை
கரூரில் இருந்து 100 வாகனத்தில் பலர் கோவை வந்துள்ளனர். ஆனால் போலீசார் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அ.தி.மு.க. பேரூராட்சி தலைவர் மகன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இது கண்டனத்துக்குரியது.
தேர்தலை சீர்குலைத்த நபர்கள் மீது வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. பிரமுகர் சேனாதிபதி தேர்தல் நடந்த பகுதிக்கு வந்தது ஏன்? அவர் தேர்தல் பார்வையாளரா? அவர் ஐகோர்ட்டு உத்தரவை மீறி செயல்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கோவையை முதல்-அமைச்சருக்கு பிடிக்கவில்லை. எனவே தான் இங்கு தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.
அறப்போர் இயக்கம்
தேவையில்லாமல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டை சுமத்துகிறது. மேலும் பொங்கல் தொகுப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக சொல்லப்படுகிறது. அதைப்பற்றி எந்த வழக்கும் இந்த அறப்போர் இயக்கம் தொடுக்கவில்லை.
வெள்ளலூர் பேரூராட்சியில் அ.தி.மு.க.வின் வெற்றியை மறைப்பதற்காகவும், முதல்-அமைச்சரின் துபாய் பயணம் குறித்து பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்தை மழுங்க அடிப்பதற்காகவும் இந்த அறப்போர் இயக்கம் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
வெள்ளலூர் பேரூராட்சியில் மறைமுக தேர்தலில் நடந்த வன்முறை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.