இணையதளத்தில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய ஏற்பாடு. கலெக்டர் தகவல்

இணையதளத்தில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-27 16:37 GMT
வேலூர்

தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தினால் அந்தந்த மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடந்து வருகிறது. விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புலஎண், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளியமுறையில் www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் இணையதளத்தின் மூலம் பதிவு செய்து தங்கள் பகுதியின் அருகே உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேர்வு செய்து நெல் கொள்முதலுக்கு தேவையான வருவாய் ஆவணங்களான பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு செய்த விவசாயிகளின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும். அந்த நேரத்தில் நெல் கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம். இணையதளவழி பதிவு திட்டத்துக்கு அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்