நீர்நிலைகள், அரசுக்கு சொந்தமான 317 ஹெக்ேடர் நில ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்நிலைகள், அரசுக்கு சொந்தமான 317 ஹெக்ேடர் நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-27 16:28 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இதர இடங்கள் என மொத்தம் 1424.77 ஹெக்டேர் அளவில் நில ஆக்கிரமிப்புகள் செய்துள்ளது கண்டறியப்பட்டது. 

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட அரசு துறைகள் மாவட்ட நிர்வாகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு தினசரி போர்க்கால அடிப்படையில் துரிதமாக அகற்றப்பட்டு வருகிறது. அதில் 30 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்களும் மீட்கப்பட்டு உள்ளது. 

நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 317.44 ஹெக்ேடர் நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற தெரிவித்து அறிவிப்பு கடிதங்களும் அளிக்கப்பட்டு வருகிறது. 

எனவே பொதுமக்கள் யாரேனும் நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இதர இடங்களில் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 

தவறும் பட்சத்தில் ஐகோர்ட்டு உத்தரவுபடி ஆக்கிரமிப்புகள் அனைத்தும் விரைவில் அகற்றப்படும். 
மேற்கண்ட தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்