விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
கொடைக்கானல் கீழ்மலை பகுதி காமனூர் ஊராட்சி மங்களபுரத்தில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை பகுதி காமனூர் ஊராட்சி மங்களபுரத்தில் உள்ள மங்களவிநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை, நவக்கிரக கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. நேற்று காலை பரிவார தெய்வங்களுக்கு 2-ம் கால யாகவேள்வி, விநாயகர் வழிபாடு, மகா தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெற்றது.
பின்னர் முக்கிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தீர்த்தத்தை கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மஞ்சள், அரிசி மாவு, பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, பன்னீர், தீர்த்தம் போன்ற பொருட்களால் சாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் காமனூர், மங்களம்கொம்பு, கானல்காடு, தாண்டிக்குடி, கொடலங்காடு, உள்ளிட்ட மலைக்கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.