சாலையோரம் நிறுத்தியிருந்த மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
புனேயில் சாலையோரம் நிறுத்தியிருந்த மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புனே,
புனேயில் சாலையோரம் நிறுத்தியிருந்த மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திடீரென தீப்பிடித்தது
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால், மின்சார வாகனங்களை பயன்படுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மின்சார கார், ஸ்கூட்டர்களுக்கு அரசும் மானியங்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று மராட்டிய மாநிலம் புனே லோகோவ் பகுதியில், பரபரப்பான சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த ஓலா நிறுவன எஸ்-1 பிரோ ரக மின்சார ஸ்கூட்டர் திடீ ரென தீப்பிடித்து எரிந்தது. எனினும் அந்த நேரத்தில் ஸ்கூட்டர் அருகே பொதுமக்கள் இல்லாததால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இதற்கிடையே சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகியது.
பாதுகாப்பில் கேள்விகுறி
இதற்கிடையே மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்த சம்பவம் குறித்து ஓலா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் டுவிட்டரில், "பாதுகாப்பு தான் எங்கள் முதன்மை நோக்கம். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பிரச்சினை சரி செய்யப்படும்" என கூறியிருந்தார்.
இதேபோல விபத்துக்கான காரணம் குறித்து அறிந்து, அதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படும் என ஓலா நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள வேலூரில் கடந்த சில நாட்களுக்கு முன் மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்த விபத்தில் தந்தை, மகள் பலியான நிலையில், புனேயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பொது மக்கள் இடையே மின்சார வாகனங்களை பயன்படுத்துவதில் உள்ள பாதுகாப்பு குறித்து கேள்வியை எழுப்பி உள்ளது.