வில்லிவாக்கத்தில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
வில்லிவாக்கத்தில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வில்லிவாக்கம் தெற்கு ஜெகநாதன் நகர் 3-வது பிரதான சாலையில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் 350-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் உள்ள மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று 100-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் ரெயில்வே அதிகாரிகள் அங்கு திரண்டு வந்து குடியிருப்பு வீடுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, அங்கு திரண்ட பொதுமக்கள் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வந்த எம்.எல்.ஏ. வெற்றியழகன் அயனாவரம் தாசில்தார் ராமு, கவுன்சிலர் ஜெயின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குடியிருப்புவாசிகளுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து விட்டு, வீடுகளை அகற்றும் நடவடிக்கை தொடரப்படும் என பொதுமக்களுக்கு உறுதியளித்ததை தொடர்ந்து, தற்காலிகமாக குடியிருப்புகளை அகற்றும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டதால் வில்லிவாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.