நம்பியூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு
நம்பியூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நம்பியூர்
நம்பியூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
நம்பியூர் அருகே உள்ள கோசணம் ஊராட்சி பொதுமக்களுக்கு பவானி ஆற்று தண்ணீர் குழாய் வழியாக வினியோகிக்கப்படுகிறது. இதற்காக மாக்கிணாங்கோம்பை என்ற இடத்தில் பவானி ஆற்றில் நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த ஒரு வாரமாக கோசணம் ஊராட்சியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை 7 மணி அளவில் கோசணத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நம்பியூர்-கோபி ரோட்டில் ஒன்று திரண்டார்கள். பின்னர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
சாலை மறியல் பற்றி தகவல் கிடைத்ததும், நம்பியூர் தாசில்தார் கிருஷ்ணன், கோசணம் ஊராட்சி தலைவர் திருமூர்த்தி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள், கடந்த ஒரு வாரமாக எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. விலைக்கு குடிநீர் வாங்கி உபயோகித்து வருகிறோம். ஒரு நாளைக்கு குடிநீருக்கு மட்டும் 250 ரூபாய் செலவு செய்யவேண்டியுள்ளது என்றனர்.
2 நாட்களில் தீர்வு
அதற்கு ஊராட்சி தலைவர் திருமூர்த்தி, ரோடு போடும் பணிக்காக பல இடங்களில் குழி தோண்டப்பட்டது. அப்போது குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் முறையாக தண்ணீர் வினியோகிக்க முடியவில்லை. 2 நாட்களில் உடைப்புகள் சரிசெய்யப்பட்டு, தடையில்லாமல் தண்ணீர் வினியோகிக்கப்படும் என்றார்.
அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டார்கள். இந்த மறியல் காரணமாக கோபி-நம்பியூர் ரோட்டில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் நம்பியூர் பேரூராட்சி பகுதியிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.
------------------