‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
pukaar petti
வீணாகும் குடிநீர்
டி.என்.பாளையம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி அத்தாணி- சத்தியமங்கலம் முக்கிய சாலையில் கள்ளிப்பட்டி காந்தி சிலை அருகே ஒரு மாதத்துக்கு முன்பு சாலையில் குழி ஏற்பட்டது. இதனால் மெயின் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தண்ணீர் வீணாக வெளியேறி சாலையில் ஆறு போல் ஓடுகிறது. மேலும் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, கொண்டையம்பாளையம்.
குடிநீர் தொட்டியில் உடைப்பு
ஈரோடு சாஸ்திரி நகரில் உள்ள கிருஷ்ணா வீதியில் ஆழ்துளை கிணறு மூலம் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடிநீர் தொட்டியில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் ஏற்ற முடியவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். உடனே குடிநீர் தொட்டி உடைப்பை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சக்திவேல், சாஸ்திரி நகர், ஈரோடு.
கரடு முரடான ரோடு
கோபியிலிருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் பாரியூர் இணைப்பு ரோடு செல்கிறது. இதனால் அங்கு தடுப்பு சுவர் அமைத்து ரோடு பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பாரியூர் ரோட்டில் இருந்து கோபி ரோட்டை தொடும் இடத்தில் ஜல்லிகள் பெயர்ந்து கரடு முரடாக காணப்படுகிறது. இதனால் அதில் செல்லும்போது வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கரடு, முரடான ரோட்டை உடனே சீரமைக்க வேண்டும்.
விஸ்வம், கோபி.
குவிந்து கிடக்கும் குப்பை
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் இருந்து பெரியவலசு செல்லும் ரோட்டில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் காற்று அடிக்கும் நேரத்தில் வாகனத்தில் செல்பவர்கள் மீது குப்பை தூசுகள் பறக்கின்றன. மேலும் அங்கு கடுமையான துர்நாற்றமும் வீசுகிறது. சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ், ஈரோடு.
பாராட்டு
ஈரோடு ரெயில் நிலையம் முன்பு செல்லும் சாலையில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மூடி உள்ள 2 இடங்களில் ஆபத்தான பள்ளம் இருந்தது. மேலும் மூடியில் கான்கிரீட் உடைந்து கம்பிகள் வெளியே தெரிந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டார்கள். இதுபற்றிய செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சரிசெய்தனர். எனவே நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும் வாகன ஓட்டிகள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
கதிர், ஈரோடு.