நெல்லை: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி உறவினர்கள் சாலைமறியல்
மின்சாரம் தாக்கி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்
நெல்லை:
மேலப்பாளையம் அருகே உள்ள மேலக்கருங்குளத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 42). கட்டிடத்தொழிலாளி. இவர் மேலப்பாளையம் ஞானியார் அப்பா நகர் 1-வது தெருவில் கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தபோது, அருகில் உள்ள மின் கம்பியில் உள்ள மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் அவருடைய உறவினர்கள் நேற்று இரவில் கருங்குளத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மின்சாரம் தாக்கி இறந்த சண்முகவேல் குடும்பத்திற்கு நிதி வழங்க வேண்டும். சரியான பாதுகாப்பு இல்லாமல் கட்டிட பணியில் ஈடுபடுத்திய உரிமையாளர் மற்றும் மேஸ்திரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இந்த பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.