சித்ரதுர்காவில் 3 லாரிகள் மோதி சங்கிலி தொடர் விபத்து; தமிழக வாலிபர் சாவு

சித்ரதுர்காவில், 3 லாரிகள் மோதி கொண்ட சங்கிலி தொடர் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த வாலிபர் பலியானார். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-03-26 21:08 GMT
சித்ரதுர்கா: சித்ரதுர்காவில், 3 லாரிகள் மோதி கொண்ட சங்கிலி தொடர் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த வாலிபர் பலியானார். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லாரிகள் மோதல்

சித்ரதுர்கா(மாவட்டம்) தாலுகா வழியாக மும்பை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கர்நாடகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்வதற்கு முக்கிய சாலையாக இந்த தேசிய நெடுங்சாலை உள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து வடமாநிலங்கள் நோக்கி சென்ற 3 லாரிகள் பரமசாகரா போலீஸ் எல்லைக்குட்பட்ட கொலால் கிராமம் அருகே சென்றபோது ஒரு லாரி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது. 

அப்போது பின்னால் வந்த மற்றொரு லாரியும் மோதியது. இந்த சங்கிலி தொடர் விபத்தில் ஒரு லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் அதில் கண்டெய்னர் ஏற்றி வந்த லாரி சாலையோர தடுப்பு கம்பியில் மோதி கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர். 

தமிழக வாலிபர்

இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் வந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர் தமிழகத்தை சேர்ந்த 25 வயது வாலிபர் என்பதும், டிரைவரின் அலட்சியத்தால் இ்ந்த விபத்து நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து பரமசாகரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்