கர்நாடகத்தில், கோவில்களில் இந்து அல்லாதவர்கள் கடை வைக்க தொடரும் எதிர்ப்பு
கோவில்களுக்கு சொந்தமான பகுதிகளில் இந்து அல்லாதவர்கள் கடை வைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவகாரம் கர்நாடகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது
பெங்களூரு: கோவில்களுக்கு சொந்தமான பகுதிகளில் இந்து அல்லாதவர்கள் கடை வைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவகாரம் கர்நாடகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இந்து அமைப்பினர் எதிர்ப்பு
கர்நாடகத்தில் கடலோர மாவட்டங்களில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இந்து கோவில்களுக்கு சொந்தமான பகுதிகளில் இந்து அல்லாமல் பிற வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்கும், கடைகள் வைத்து நடத்துவதற்கும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடுப்பி மாவட்டத்தில் இந்த தொடங்கிய பிரச்சினை சிவமொக்கா மாவட்டத்திற்கு பரவியது.
பின்னர் சிவமொக்கா, சிக்கமகளூரு மாவட்டங்களிலும் இந்து கோவில்கள் அமைந்துள்ள பகுதிகளிலும், கோவில் திருவிழாக்களிலும் இந்துஅல்லாத பிற வியாபாரிகள் வியாபாரம் செய்ய கூடாது என்றும், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களின் கட்டிடங்களை இந்து அல்லாத வியாபாரிகளுக்கு குத்தகைக்கு வழங்க கூடாது என்றும் இந்து அமைப்பினர் போர்க்கொடி தூக்கி போராட்டங்களில் ஈடுபட்டனர்.
விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சினை
தற்போது இந்த விவகாரம் கடலோர மாவட்டங்களில் இருந்து கர்நாடக மாநிலம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக பிரசித்தி பெற்ற மைசூரு சாமுண்டீஸ்வரி கோவில் பகுதியில் 5 முஸ்லிம்கள் கடைகள் நடத்தி வருவதாகவும், அந்த கடைகளை அவர்கள் காலி செய்ய வேண்டும் என்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அறநிலையத்திற்கு கடிதமும் கொடுத்துள்ளனர்.
இதுபோன்று துமகூரு, ஹாசன், மண்டியா, பெலகாவி, யாதகிரி, பெங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பரவி இருக்கிறது.
விசுவ இந்து பரிஷத், ஸ்ரீராமசேனை உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள், இந்து கோவில்கள் அமைந்துள்ள பகுதிகளிலும், கோவில்களுக்கு சொந்தமான கடைகளிலும் இந்து அல்லாதவர்கள் வியாபாரம் செய்ய அனுமதிக்க கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளனர்.