தஞ்சையின் கூவமாக மாறும் கல்லணைக்கால்வாய்

குப்பைகள், கழிவுகள் கொட்டுவதால் தஞ்சையின் கூவமாக கல்லணைக்கால்வாய் மாறி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Update: 2022-03-26 20:05 GMT
தஞ்சாவூர்:
குப்பைகள், கழிவுகள் கொட்டுவதால் தஞ்சையின் கூவமாக கல்லணைக்கால்வாய் மாறி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கல்லணைக்கல்வாய்
தஞ்சை வழியாக சென்று பாயும் ஆறுகளில் ஒன்று புது ஆறு எனப்படும் கல்லணைக்கால்வாய். இந்த ஆறு தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து பிரிந்து தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 2.29 லட்சம் ஏக்கருக்கு பாசன வசதி அளித்து வருகிறது. இந்த கல்லணைக்கால்வாய் ஆறு மூலம் 694 ஏரி, குளங்களும் பாசன வசதி பெறுகிறது.
பிணம் தின்னி ஆறு எனப்படும் இந்த ஆறு 1934-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி திறக்கப்பட்டது. இந்த ஆற்றில் குறிப்பாக ஜூன் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை தண்ணீர் திறக்கப்படும். மீதமுள்ள 4 மாதங்களில் மட்டும் தண்ணீர் திறக்கப்படாது.
புனரமைப்பு பணிகள்
இந்த கல்லணைக்கால்வாயில் தற்போது புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தஞ்சை 20 கண் பாலம் அருகே இருந்து புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதே போல் தஞ்சை இர்வீன் பாலம் பகுதியிலும் புதிய பாலம் கட்டுவதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் இதற்கு இடைப்பட்ட பகுதியில் தற்போது ஆற்றில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இந்த தண்ணீரில் அந்தந்த பகுதியில்உள்ள குப்கைள், கழிவுகள் கொட்டப்படுகின்றன. மேலும் பல்வேறு கடைகளில் உள்ள கழிவுநீரையும் இந்த ஆற்றில் தான் கொட்டுகிறார்கள். இதனால் தேங்கியுள்ள தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது.
துர்நாற்றம் வீசும் அவலம்
மேலும் ஆற்றில் எங்கு பார்த்தாலும் கழிவுப்பொருட்கள் தேங்கி காணப்படுகின்றன. சென்னையின் கூவம் நதி போல் தஞ்சையில் கூவம் நதியாக கல்லணைக்கால்வாய் காட்சி அளிக்கிறது. கல்லணைக்கால்வாய் கரையின் இருபுறமும் செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், தஞ்சை நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து வடிகாலில் வரும் கழிவுநீர் ஆற்றுக்கு அடிப்பகுதியில் செல்லும் வகையில் சுரங்கப்பாதையும் கட்டப்பட்டு அதன் வழியாக ஆற்றின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கழிவுநீர் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் சாந்தப்பிள்ளை கேட் பகுதி அருகே பாதாள சாக்கடை கழிவுநீரை ஆற்று கடந்து கொண்டு செல்வதற்காக ராட்சத குழாய்கள் பொருத்தப்பட்டு அதற்காக பாலம் அமைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
இதில் இருந்து கழிவுநீர் கசிவு அவ்வப்போது ஏற்பட்டு ஆற்றில் கலப்பது வழக்கம். ஆனால் தற்போது தேங்கிக்கிடக்கும் தண்ணீருடன் கழிவுநீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாக்கடைநீர் செல்லும் சுரங்கப்பாதையில் இருந்து கசிவு ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால் தான் நாளுக்கு நாள் துர்நாற்றம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் பராமரிப்பு காரணமாக தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாதால் அதிகஅளவில் தேங்கிக்கிடக்கிறது. எனவே இதில் கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு, சாக்கடை நீர் கலக்காத வகையிலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்