சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் தேர்தல் இன்று நடக்கிறது-ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு
சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் தேர்தல் இன்று நடக்கிறது. ஓமலூரில் தேர்தல் நடக்கும் இடத்தை எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
சேலம்:
சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் தேர்தல் இன்று நடக்கிறது. ஓமலூரில் தேர்தல் நடக்கும் இடத்தை எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
அமைப்பு தேர்தல்
தமிழகத்தில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி சேலம் புறநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகளுக்கான அமைப்பு தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதன்படி ஓமலூரில் உள்ள நடராஜ செட்டியார் திருமண மண்டபத்தில் எடப்பாடி வடக்கு, எடப்பாடி தெற்கு, கொங்கணாபுரம், நங்கவள்ளி வடக்கு, நங்கவள்ளி தெற்கு, கொளத்தூர் மேற்கு, கொளத்தூர் கிழக்கு, மேச்சேரி கிழக்கு, மேச்சேரி மேற்கு, தாரமங்கலம் தெற்கு, தாரமங்கலம் வடக்கு, ஓமலூர் மேற்கு, ஓமலூர் வடக்கு, ஓமலூர் தெற்கு, காடையாம்பட்டி கிழக்கு, காடையாம்பட்டி மேற்கு, மகுடஞ்சாவடி, சங்ககிரி கிழக்கு, சங்ககிரி மேற்கு ஆகிய ஒன்றியங்களுக்கு தேர்தல் நடக்கிறது.
இதேபோல் எடப்பாடி நகரம், மேட்டூர் நகரம், தாரமங்கலம் நகரம், இடங்கணசாலை நகரங்களுக்கும், பூலாம்பாடி, கொங்கணாபுரம், ஜலகண்டாபுரம், வனவாசி, நங்கவள்ளி, கொளத்தூர், வீரக்கல்புதூர், பி.என்.பட்டி, மேச்சேரி, கருப்பூர், ஓமலூர், காடையாம்பட்டி, சங்ககிரி, தேவூர், அரசிராமணி ஆகிய பேரூராட்சிகளுக்கும் நடக்கிறது.
எடப்பாடி பழனிசாமி ஆய்வு
மேலும் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் சேலம் மேற்கு, சேலம் கிழக்கு, பனமரத்துப்பட்டி மேற்கு, பனமரத்துப்பட்டி கிழக்கு, வீரபாண்டி மேற்கு, வீரபாண்டி கிழக்கு, அயோத்தியாப்பட்டணம் வடக்கு, அயோத்தியாப்பட்டணம் தெற்கு, வாழப்பாடி, ஏற்காடு, ஆத்தூர் மேற்கு, ஆத்தூர் கிழக்கு, பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு, பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு, தலைவாசல் வடக்கு, தலைவாசல் தெற்கு, கெங்கவல்லி கிழக்கு, கெங்கவல்லி மேற்கு ஆகிய ஒன்றியங்கள், ஆத்தூர், நரசிங்கபுரம் நகரங்களுக்கு தேர்தல் நடக்கிறது.
இதேபோல் கன்னங்குறிச்சி, மல்லூர், பனமரத்துப்பட்டி, ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பேளூர், கீரிப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், வீரகனூர், கெங்கவல்லி, தொடாவூர், செந்தாரப்பட்டி, தம்மம்பட்டி ஆகிய பேரூராட்சிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
இந்தநிலையில் தேர்தல் நடைபெற உள்ள அ.தி.மு.க. அலுவலகம் மற்றும் நடராஜ செட்டியார் திருமண மண்டபத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைப்பு செயலாளர் செம்மலை, மணி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.