அ.தி.மு.க. கவுன்சிலர் ஆதரவுடன் பேளூர் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது-போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

அ.தி.மு.க. கவுன்சிலர் ஆதரவுடன் பேளூர் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. மேலும் அ.தி.மு.க.வினர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-26 19:54 GMT
வாழப்பாடி:
அ.தி.மு.க. கவுன்சிலர் ஆதரவுடன் பேளூர் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. மேலும் அ.தி.மு.க.வினர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
வாழப்பாடி அருகே உள்ள பேளூர் பேரூராட்சியில் தி.மு.க. 6 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும் என சம பலத்துடன் வெற்றி பெற்று இருந்தன. மேலும் 3 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இதனால் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றுவது யார்? என எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி பேரூராட்சி தலைவர் மறைமுக தேர்தலையொட்டி தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் ராமு தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கூறினார். 
அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் தங்கள் தரப்பை சேர்ந்த ஒரு கவுன்சிலரை அ.தி.மு.க.வினர் கடத்தி விட்டதாக தெரிவித்தனர். இதனால் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அலுவலக ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மேலும் வாக்குப்பெட்டி தூக்கி வீசப்பட்டது. இதனால் தேர்தல் நடத்தும் அலுவலர் ராமு தேர்தலை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இதேபோல் துணைத்தலைவர் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டது. 
தி.மு.க. வேட்பாளர் வெற்றி
இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தலை நடத்தக்கோரி மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தலை நடத்தி அதற்குரிய வீடியோ மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஐகோர்ட்டில் வருகிற 28-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து நேற்று சேலம் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி தலைமையில் பேரூராட்சி தலைவருக்கான தேர்தல் நடந்தது. தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் ஜெயசெல்வியும், அ.தி.மு.க. சார்பில் பரமேஸ்வரியும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் ஜெயசெல்வி 8 வாக்குகளும், பரமேஸ்வரி 7 வாக்குகளும் பெற்றனர். தி.மு.க.வை சேர்ந்த ஜெயசெல்வி வெற்றி பெற்றதாக உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி தெரிவித்தார். இதனால் அ.தி.மு.க. மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் 8 பேர் கையெழுத்திடாமல் வெளியேறினர்.
போலீசாருடன் தள்ளுமுள்ளு
இந்தநிலையில் 10-வது வார்டில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. கவுன்சிலரான கவிதா, தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களித்ததாக தகவல் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் பேரூராட்சி அலுவலகம் அருகே கவிதாவின் கணவரும், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளருமான வெங்கடேசனை தாக்கினர். 
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். இதனால் அ.தி.மு.க.வினர் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பேரூராட்சி அலுவலகம் அருகே திரண்டிருந்த அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
தி.மு.க.வுக்கு ஆதரவளித்த அ.தி.மு.க. கவுன்சிலர்
இதைத்தொடர்ந்து மதியம் துணைத்தலைவருக்கான தேர்தல் நடந்தது. இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த கவிதா மற்றும் தி.மு.க. ஆதரவு கவுன்சிலர்கள் 7 பேர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. ஆதரவு கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை. தி.மு.க. சார்பில் பேபி சவுந்தரராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. மேலும் அ.தி.மு.க. கவுன்சிலர் கவிதா தனது கணவரை தாக்கியதால் ஆத்திரமடைந்து, தி.மு.க. வேட்பாளர் பேபி சவுந்தரராஜனுக்கு ஆதரவளித்தார். இதனால் பேபி சவுந்தரராஜன் துணைத்தலைவராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதன்மூலம் பேளூர் பேரூராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியது. கணவரை தாக்கியதால் அ.தி.மு.க. கவுன்சிலர் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டது அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்