“அண்ணாமலைக்கு அரசியல் தெரியாது”-அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

அண்ணாமலைக்கு அரசியல் தெரியாது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

Update: 2022-03-26 19:06 GMT
ராமநாதபுரம், 

அண்ணாமலைக்கு அரசியல் தெரியாது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

புகைப்பட கண்காட்சி

ராமநாதபுரத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புதிய பஸ் நிலையம் பகுதியில் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி விடுதலைப்போரில் தமிழகம் என்ற பெயரிலான புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அந்த கண்காட்சியை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 
தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு, நகர் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்துவருகின்றனர். 40 சதவீதம் பேர் எதிர்பார்த்த நிலையில் தற்போது 62 சதவீதம் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். இதற்காக ரூ.1,510 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்காக ரூ.928 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். 

நஷ்டம்

போக்குவரத்து கழகங்கள் ஏற்கனவே ரூ.48 ஆயிரத்து 154 கோடி நஷ்டத்தில் உள்ளது. இந்த நிலையில் டீசல் விலை உயர்ந்துவிட்டது. இதனால் பணிமனையில் இருந்து டீசல் வாங்க இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மூலம் லிட்டருக்கு 69 பைசா குறைவாக வாங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன்மூலம் அரசுக்கு ரூ.3½ கோடி கிடைக்கிறது. போக்குவரத்து துறையை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆண்களுக்கு இலவச பஸ் பயண அனுமதி என்பது சாத்தியமில்லை. 

அரசியல் தெரியாது

தான் இன்னும் போலீஸ் என்ற சிந்தனையில்தான் அண்ணாமலை இருக்கிறார். அவருக்கு அரசியல் தெரியாது. ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்லிக்கொண்டிருக்கிறார். 
தமிழக முதல்-அமைச்சர் வெளிநாடு சென்றுள்ளார். வந்தவுடன் தமிழகத்தில் அதிகமான தொழில் தொடங்க வாய்ப்புள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை நியாயமானது. நிலைமை சரியானதும் முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி குறைகள் சரிசெய்யப்படும்.
 பள்ளிக்கூட மாணவர்கள் பள்ளி செல்லும் நேரங்களில் பஸ்களில் தொங்கி கொண்டு செல்வது உண்மைதான். அதனை மாற்ற வேண்டும். பஸ்சில் இடம் இருந்தாலும் தொங்கி கொண்டு செல்வதையும் பார்க்க முடிகிறது. தேவைப்படும் இடங்களுக்கு பஸ் வசதி செய்து கொடுக்கப்படும். தமிழகத்தில் தற்போது 18 ஆயிரத்து 177 பஸ்கள் ஓடுகின்றன. இன்னும் கேட்டாலும் கூடுதல் பஸ்கள் விட தயாராக உள்ளோம்.
 இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்