அன்னவாசலில், டாஸ்மாக் கடையை குடியிருப்பு பகுதிக்கு மாற்றியதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

அன்னவாசலில் டாஸ்மாக் கடையை குடியிருப்பு பகுதிக்கு மாற்றியதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-26 18:12 GMT
அன்னவாசல்:
டாஸ்மாக் கடை
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல்-இலுப்பூர் சாலையில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வந்தது. இந்தநிலையில் இந்த டாஸ்மாக் கடையை மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு இரவோடு இரவாக அதிகாரிகள் மாற்றியதாக கூறப்படுகிறது. தற்போது மாற்றியிருக்கும் இடத்தின் சாலையில் அரசு மாணவர் விடுதி, குறிஞ்சி கோவில் மற்றும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 
நெடுஞ்சாலை ஓரங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்படக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதன்படி அன்னவாசலில் கடந்த 4 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் அங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.
போராட்டம்
தற்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் மாற்றப்பட்டதற்கும், இந்த கடை இங்கு அமைந்தால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதனை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாணவர் விடுதி அருகே அன்னவாசல்- புதுக்கோட்டை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்ற பின்னர் சம்பந்தப்பட்ட புதிய இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

மேலும் செய்திகள்