துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி

கீழ்வேளூர் பேரூராட்சி துணை தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.

Update: 2022-03-26 17:56 GMT
சிக்கல்:
கீழ்வேளூர் பேரூராட்சி துணை தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.
கீழ்வேளூர் பேரூராட்சி
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் கடந்த 4-ந் தேதி நடந்தது. இதில் தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட 11-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் ராசாத்தியும், இவரை எதிர்த்து 15-வது வார்டு தி.மு‌.க. உறுப்பினர் இந்திராகாந்தியும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் இந்திராகாந்தி வெற்றி பெற்று பேரூராட்சி மன்ற தலைவரானார். அன்று மாலை துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற இருந்த நிலையில் 15 வார்டு உறுப்பினர்களில் 6 பேர் மட்டுமே வந்திருந்தனர். பெரும்பான்மை இல்லாததால் தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் துணை தலைவர் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
துணைத்தலைவர் தேர்தல்
இதனைத்தொடர்ந்து பேரூராட்சி துணை தலைவர் தேர்தல் மார்ச் 26-ந ்தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கீழ்வேளூர் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று துணைத்தலைவர் தேர்தல் நடந்தது.இந்த தேர்தலில் 9-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் சந்திரசேகரனும், 8-வது வார்டு ம.தி.மு.க. உறுப்பினர் காந்திமதியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தி.மு.க. வேட்பாளர் வெற்றி
இதில் சந்திரசேகரன் 12 வாக்குகள் பெற்று துணைத்தலைவரானார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காந்திமதி 3 வாக்குகள் பெற்றார். தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி ஆணையர்(தணிக்கை) மோகனசுந்தரம் மற்றும் தேர்தல் பார்வையாளர் உதவி ஆணையர்(கலால்) குணசேகர், பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் தேர்தலை நடத்தினர்.

மேலும் செய்திகள்